என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கள்ளக்காதலன் கைது"
ஓட்டேரி, பாயம்மாள் தெருவை சேர்ந்தவர் தேவி (வயது 39). கணவரை இழந்த இவருக்கும் கொரட்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் தங்கராஜிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் கொரட்டூர் பகுதியிலேயே தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் தேவியின் நடத்தையில் தங்கராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து வந்து தேவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதே போல் நேற்று நள்ளிரவும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. மது போதையில் இருந்த தங்கராஜ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தேவி தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த தங்கராஜ், மண்எண்ணையை தேவி மீது ஊற்றி தீ வைத்தார். உடல் கருகிய அவர் கதறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய தேவியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
முன்னதாக தேவி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “எனது நடத்தையில் சந்தேகம் அடைந்த தங்கராஜ் மண்எண்ணை ஊற்றி உயிரோடு எரித்தார்” என்று கூறி உள்ளார்.
இதையடுத்து தங்கராஜை போலீசார் கைதுசெய்தனர். அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேவி கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது.
பெண் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் கொரட்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு வட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 35). இவரது மனைவி ராக்கி (26). இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.
கடந்த 12-ந்தேதி வினோத் தனது மனைவி மற்றும் மகனுடன் அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சத்தம்போட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் ராக்கி அலறும் சத்தம் கேட்டதால் அக்கம், பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் அங்கு ஓடிச் சென்றனர்.
அப்போது தனது வீட்டு முன்பு கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வினோத் பிணமாக கிடந்தார். தன்னுடன் தகராறு செய்த கணவர் வினோத் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி ராக்கி கதறி அழுதார்.
இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று வினோத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் வினோத்தின் தந்தை ஜோசப் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் எனது மகன் வினோத்துக்கும், ராக்கிக்கும் திருமணம் ஆனதில் இருந்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர்கள் தனிக்குடித்தனம் சென்று விட்டனர். அதன் பிறகும் அவர்கள் இடையே தகராறு நீடித்தது. இதனால் வினோத்தை ஆள் வைத்து ராக்கி தாக்கிய சம்பவமும் நடந்து உள்ளது. எனவே எனது மகன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. அதில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில் பிரேத பரிசோதனையின் போது வினோத்தின் கையில் ராக்கியின் தலைமுடி இருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அப்போது ராக்கியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர் கணவர் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவே போலீசாரிடம் மீண்டும், மீண்டும் கூறினார்.
இதனால் ராக்கியின் 6 வயது மகனிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் தனது மகன் பேசுவதை இடைமறித்து ராக்கி பேசியபடி இருந்தார். இதைத்தொடர்ந்து அந்த சிறுவனை தனியாக அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்தனர்.
அப்போது வினோத் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. ராக்கியும், அவரது கள்ளக்காதலன் மனோஜ் ஆகியோர் சேர்ந்து வினோத்தை தீர்த்து கட்டியதும் தெரிய வந்தது.
வினோத்தின் உறவினரான மனோஜ் அந்த பகுதியில் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி வினோத் வீட்டிற்கு வந்து சென்றதில் ராக்கியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.
சம்பவத்தன்று ஆலயத்திற்கு சென்று வந்ததும் வினோத் கடைக்கு சென்று உள்ளார். அப்போது மனோஜ், ராக்கியை பார்ப்பதற்காக அங்கு வந்தார். உடனே தனது மகனை வீட்டுக்கு வெளியே விளையாடும்படி அனுப்பிவிட்டு ராக்கி கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
அந்த நேரம் வினோத் வீட்டிற்கு வந்துவிட்டதால் அந்த காட்சியை நேரில் பார்த்து ஆத்திரமடைந்தார். இதனால் மனோஜ் அங்கிருந்த கத்தியை எடுத்து வினோத் கழுத்தில் குத்தி உள்ளார். கணவர் வினோத் தப்பிவிடாமல் இருக்க அவரது கைகளை ராக்கி பிடித்துக்கொண்டு கொலைக்கு உடந்தையாக இருந்து உள்ளார். இந்த தகவல்களை அந்த சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான்.
இதைத்தொடர்ந்து கள்ளக்காதலன் மனோஜை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக ராக்கியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள முத்தூட் நிதிநிறுவனத்தில் கடந்த 27-ந் தேதி மாலை முகமூடி கொள்ளையன் நுழைந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 804 பவுன் நகை மற்றும் ரூ.1,34,000-ஐ கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டப்பகலில் நிதிநிறுவனத்தில் பணியில் இருந்த 2 பெண் ஊழியர்களை தாக்கி விட்டு நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
நிதிநிறுவன ஊழியர்களான போத்தனூரை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரது மனைவி ரேணுகா தேவி(26), கெம்பட்டி காலனியை சேர்ந்த திவ்யா(24) ஆகியோரிடம் போலீசார் துருவி, துருவி விசாரித்தனர்.
கொள்ளையன் தாக்கியதில் மயக்கம் போட்டு விழுந்ததாகவும், 2 மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்த போது கொள்ளை நடந்தது தெரிந்ததாகவும் இருவரும் கூறினர். நிறுவனத்துக்குள் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் கொள்ளையன் நுழையும் காட்சிகள் இருந்தது.
ஆனால் ஊழியர்களை தாக்கும் காட்சிகள் இல்லை. மேலும் ரூ.2 கோடி நகைகள் இருக்கும் பாதுகாப்பு அறையை திறக்கும் பெரிய இரும்பு கதவு திறந்திருந்தது குறித்து விசாரித்த போதும் சரியான தகவல் கிடைக்கவில்லை. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே இரு ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தனர்.
கொள்ளை நடந்த நிதி நிறுவனத்தின் கிளையில் வேலை செய்த திவ்யா என்ற பெண் திடீரென விடுமுறை எடுத்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக செல்வபுரம் கிளையில் பணியாற்றி வந்த மற்றொரு திவ்யா பணிக்கு வந்துள்ளார்.
ரேணுகா தேவி இந்த கிளையிலேயே பணியாற்றி வந்துள்ளார். ரூ.2 கோடி நகைகள் இந்த கிளையில் இருப்பது வெளியாட்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால் இந்நிறுவன ஊழியர்கள் தொடர்பு இல்லாமல் இந்த கொள்ளை நடக்க வாய்ப்பு இல்லை என போலீசார் கருதினர். இதைத்தொடர்ந்து பணியில் இருந்த ரேணுகா தேவி, திவ்யா ஆகியோரது செல்போன் அழைப்புகள் பட்டியலை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் ரேணுகா தேவியின் செல்போனுக்கு அடிக்கடி வந்த சில அழைப்புகள் போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கெம்பட்டி காலனியை சேர்ந்த சுரேஷ்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்த இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில வருடங்களாக கோவை கெம்பட்டி காலனியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் இதற்கு முன்பு ஒரு நகைகடையிலும் வேலை பார்த்துள்ளார். முத்தூட் நிறுவனத்தில் நகையை அடகு வைக்க சென்ற போது இவருக்கு ரேணுகா தேவியின் பழக்கம் கிடைத்துள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
அப்போது சுரேஷ் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டத்தில் இருப்பதாக கூறி ரேணுகா தேவியிடம் அவர் வேலை பார்க்கும் நிதிநிறுவனத்திலேயே நகைகளை கொள்ளையடிக்கும் திட்டத்தை கூறி உள்ளார். அதற்கு ரேணுகா தேவியும் சம்மதிக்க, சம்பவத்தன்று மாலை 3 மணி அளவில் முகத்தை மறைத்துக் கொண்டு நிதி நிறுவனத்துக்கு சென்று நகை, பணத்தை கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அளித்த தகவலின் பேரில் கொள்ளையடிக்கப்பட்ட 804 பவுன் நகைகள், மற்றும் பணம் மீட்கப்பட்டது.
சுரேஷ் கொடுத்த தகவலின்பேரில் முத்தூட் நிதி நிறுவன பெண் ஊழியர் ரேணுகாதேவியும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், இச்சம்பவத்தில் ரேணுகா தேவி எந்தெந்த வகைகளில் சுரேசுக்கு உதவினார்? என விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
வாணியம்பாடி, பிப்.17-
வாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய்-கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங்களூரை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் 7 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 குழந்தைகள். 3-வது குழந்தை ரித்திகா (வயது 1½) பெங்களூரில் குடும்பம் நடத்தி வந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முரளி என்பவருடன் நளினிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட தகராறில் கணவரை பிரிந்து வாணியம்பாடிக்கு வந்தார். நேற்று முன்தினம் நளினி வீட்டுக்கு முரளி வந்திருந்தார். அப்போது நளினி கடைக்கு சென்று விட்டார். திரும்பி வந்த போது குழந்தை ரித்திகா உடலில் காயத்துடன் உயிருக்கு போராடியது.
வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியில் குழந்தை இறந்து விட்டது. வாணியம்பாடி டவுன் போலீசார் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து நளினி அவரது கள்ளக்காதலன் முரளி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நளினி, முரளியை கைது செய்தனர். குழந்தைக்கு பாலியல் தொல்லை செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர்- சர்ஜாபுரம் ரோட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் லே அவுட் பகுதி பக்கமுள்ள தோப்பில், எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், வாலிபர் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டதில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்த அந்த வாலிபர் கிருஷ்ணகிரி அருகே நாரலபள்ளி கிராமத்தை சேர்ந்த வரதராஜ் என்பவரது மகன் சுப்பிரமணி (வயது 35) என்பதும், இவர் பெங்களூர் அருகே பெல்லந்தூரில் ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார் என்பதும் தெரிய வந்தது மேலும் இவருக்கு பாக்கியலட்சுமி (25) என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில், சுப்பிரமணியை கொன்றது யார், எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இதில், அவரது மனைவியின் திட்டப்படி, கள்ளக்காதலனே சுப்பிரமணியை கொன்றது தெரிய வந்தது. அதாவது, சுப்பிரமணி வேலை பார்த்து வந்த பெல்லந்தூர் பகுதியில் பானிப்பூரி கடை நடத்தி வருபவர் சரத்குமார் (27). இவர் கிருஷ்ணகிரி அருகே சின்னசக்கனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் ஆவார். சரத்குமாருக்கு திருமணமாகி, மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், பெல்லந்தூரில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து அந்த பகுதியில் மனைவியுடன் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்த சுப்பிரமணிக்கும், பானிபூரி கடை நடத்தி வந்த சரத்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சரத்குமார் அடிக்கடி சுப்பிரமணி வீட்டிற்கு வந்து செல்வாராம். அப்போது, அவரது மனைவி பாக்கியலட்சுமிக்கும், சரத்குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சுப்பிரமணி, மனைவியை கண்டித்து 3 மாதத்திற்கு முன்பு அவரது சொந்த ஊரான நாரலபள்ளிக்கு அழைத்துச்சென்று வீட்டில் விட்டு பெங்களூரு திரும்பினார். இந்நிலையில் பாக்கியலட்சுமியும், சரத்குமாரும் போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர்.
மேலும், தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள சுப்பிரமணியை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 10-ந் தேதி பாக்கியலட்சுமியை சந்திப்பதற்காக சரத்குமார் நாரலப்பள்ளி சென்றார். அப்போது பாக்கியலட்சுமி, தனது கணவர் மிகவும் டார்ச்சர் செய்வதாகவும், அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்றும் சரத்குமாரிடம் கூறியுள்ளார். பின்னர் பெங்களூரு திரும்பிய சரத்குமார், சுப்பிரமணிக்கு போன் செய்து, புதிய வியாபாரம் செய்வது தொடர்பாக பேசலாம் வா, என்று அவரை வரவழைத்து, தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, பாகலூர்-சர்ஜாபுரம் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக்கொண்டும், அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் மது வாங்கியும், அருகிலுள்ள ஒரு லே அவுட்டுக்கு சுப்பிரமணியை அழைத்து சென்றார். லே அவுட் அருகே ஒரு தோப்பில் இருவரும் மது அருந்தியபோது, அதிக போதையில் இருந்த சுப்பிரமணியை கீழே தள்ளி அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டார்.
இதில், சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி இறந்தார். பின்னர், அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தியும், சுப்பிரமணி கொலைக்கு பயன்படுத்திய கல்லை, அருகில் இருக்கும் ஏரியில் வீசியும் அங்கிருந்து சரத்குமார் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, சர்ஜாபுரம் பகுதியில் தலைமறைவாக இருந்த சரத்குமாரை பாகலூர் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்க நாயக்கன்பட்டியை சேர்ந் தவர் சொர்ணமணி. இவரது மனைவி கலையரசி. இவர்களது மகன் உதயகுமார் (வயது 29). இவர் அக்க நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கோழிக்கடை நடத்தி வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாஷாதேவி என்பவரை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு கனிஷ்காவும்(4), 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாஷாதேவி கணவரை பிரிந்து கோவில்பட்டி மந்திதோப்பில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதையடுத்து கனிஷ்கா உதயகுமாருடனும், மற்றொரு குழந்தை மாஷாதேவியுடனும் வசித்து வருகின்றனர். உதயகுமார் இரவில் கடை அருகிலேயே படுத்து தூங்கி விடுவார். இதே போல் கடந்த 13-ந் தேதி இரவு கடையை அடைத்துவிட்டு கடை அருகில் தூங்கினார்.
இந்நிலையில் கோழிக்கடை முன்பு உதயகுமார் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின்பேரில், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு திருஞான சம்பந்தன் தலைமையில் புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் ஞான்ராஜ், மணியாச்சி இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு கோழிக்கடை உரிமையாளரை கொலை செய்த கும்பலை பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வந்தனர்.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதில் உதயகுமாருக்கும், மாஷா தேவிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இருவரது வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்ற நிலையில் திடீரென மாஷாதேவி போக்கில் மாற்றம் ஏற்பட்டது.
இது உதயகுமாருக்கு தெரியவந்ததும் மனைவியை கண்காணித்தார். அப்போது மாஷாதேவிக்கு அக்க நாயக்கன்பட்டியை சேர்ந்த ஒரு வாலிபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி உதயகுமார் மனைவியிடம் கேட்டபோது அவர் மறுத்துள்ளார். இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாஷாதேவி தனது 2-வது குழந்தையை தூக்கி கொண்டு கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதில் மனவேதனை அடைந்த உதயகுமார் அந்த வாலிபரை கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். இதை தெரிந்து கொண்ட மாஷா தேவி தனது கள்ளக்காதலனிடம் விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து கள்ளக்காதலன் உதயகுமாரை கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் போலீசார் அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த கள்ளக்காதலனான மின்சார வாரியத்தில் டவர் அமைக்கும் பணியில் சப் காண்டிராக்டராக பணியாற்றி வரும் ரஞ்சித்குமார் (28) என்பவரை இன்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.
எனக்கும் மாஷா தேவிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இது உதயகுமாருக்கு தெரியவந்ததும் அவர் என்னை கண்டித்தார். இதைத்தொடர்ந்து மாஷா தேவி தனது தாய் வீடான மந்திதோப்புக்கு வந்து விட்டார். எனினும் உதயகுமார் என்னை தொடர்ந்து கண்டித்து வந்தார்.
மேலும் அவர் என்னை கொலை செய்ய திட்ட மிட்டதும் தெரியவந்தது. எனவே அவர் என்னை கொலை செய்வதற்கு முன்பு நான் முந்தி கொண்டு அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். நேற்று முன்தினம் கடை முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்த உதயகுமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நவதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராணி (வயது 45). இவர்களுக்கு பூவரசன் என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நவதி அருகில் ராணியின் முகம், கை, கால்கள் என பல இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராணி கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மேல ஆசாரப்பள்ளியை சேர்ந்த விவசாயி தேவராஜ் (60) என்பவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
கைது செய்யப்பட்ட தேவராஜிக்கும், ராணிக்கும் நீண்ட காலமாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. ராஜா பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்ததால் தேவராஜ் அடிக்கடி ராணி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். தேவராஜ் 3 செண்ட் நிலம் வாங்கி உள்ளார். அந்த நிலத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு ராணி கேட்டுள்ளார். மேலும் ராணிக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை தேவராஜ் கண்டித்தும் ராணி கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், சம்பவத்தன்று இரவு நிலத்தை எழுதி தருகிறேன். அதற்காக ஆதார் அட்டையை எடுத்து வருமாறு போனில் கூறி உள்ளார். இதனால் ராணி ஆதார் அட்டையுடன் நவதி பகுதிக்கு சென்ற போது வேறு நபருடனான கள்ளத்தொடர்பு குறித்து 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராணியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைதான தேவராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தண்டுபாளையம் காலனியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 30). டீ மாஸ்டர். இவருடைய மனைவி செல்வி என்கிற தமிழ்செல்வி (25). இவர்களுக்கு மனோஜ் (5) என்ற மகனும், மேனகாதேவி (2½) என்ற மகளும் உள்ளனர்.
தமிழ்செல்விக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வ குமார் (22) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் செல்வகுமாரின் பெற்றோருக்கும், தமிழ்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
விசாரணைக்காக செல்வகுமார் மற்றும் தமிழ்செல்வியின் குடும்பத்தினரை போலீஸ் நிலையம் வருமாறு போலீசார் கூறியிருந்தனர். அதன்படி பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்கு தமிழ்செல்வி தனது 2 குழந்தைகளுடன் வந்தார்.
பண்ருட்டி போலீஸ் நிலையம் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு சென்ற தமிழ்செல்வி, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அங்கிருந்தவர்கள் உடனடியாக தமிழ்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழ்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணைக்கு பயந்த தமிழ்செல்வி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் முன்னதாக இறப்பதற்கு முன்பு தமிழ்செல்வி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது கணவருக்கும், செல்வக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பக்கத்து வீடு என்பதால் செல்வாகுமார் அடிக்கடி வந்து செல்வார். நாட்கள் செல்ல செல்ல அவரது பேச்சு தவறாக இருந்தது.
மேலும் எனது கணவர் வீட்டில் இல்லாதபோது அடிக்கடி வீட்டுக்குவர ஆரம்பித்தார். ஒருநாள் அவர் என்னை மிரட்டி பலவந்தமாக கற்பழித்தார். இதை வெளியில் கூறினால் என்னையும், கணவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். மேலும் பலமுறை மிரட்டி என்னை அவர் சீரழித்து உள்ளார். அவர் தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால்தான் நான் சாவும் முடிவை எடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கள்ளக்காதலன் செல்வக்குமாரை கைது செய்தனர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்